சுய-மதிப்பு ஓர்-இஸ்லாமியக் கண்ணோட்டம்

ஒரு தவறைச் செய்ததன் காரணமாக மனமுடைந்து போயுள்ள ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிம் சொல்லாலும் செயலாலும் துன்புறுத்துவதைக் காணும் போது, நீ ஒரு முட்டாள்...என்று ஏசுவதைக் கேட்கும் போது, நீ எல்லாவற்றையும் நாசம் செய்கிறாய்! என்று திட்டுவதைக் கேட்கும் போது அந்த மனிதர் கவலையில் பெருமூச்சு விடுவதைப் பார்க்கும் போது, அவனை உதைத்து நீ ஒரு உதவாக்கறை! என்று சாடும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? தவறிழைத்த அந்த மனிதர் மீது உங்கள் உள்ளத்தில் ஏற்படும் அனுதாபத்தினால் செய்வதறியாது திகைத்து நிற்பீர்கள் அல்லவா? அப்போது அவரைப் பாதுகாத்து நொந்து போயுள்ள அவரது மனதுக்கு ஆறுதல் கூறமுற்படுவீர்கள். மனிதர்களாகிய நாம் அனைவரும் தவறிழைப்பது இயல்பானதே. நாங்கள் முயற்சி செய்தால் எங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும் என்று ஆறுதல் கூறுவீர்கள். இவ்வாறு நீங்கள் கூறும் ஆறுதல் மெதுமெதுவாகப் பயனளிக்க ஆரம்பிக்கும் போது உங்கள் கோபம் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் குரூரமான கடின உள்ளம் படைத்த மனிதனை நோக்கித் திரும்பும். சிலவேளை அந்த மனிதன் நீங்களாகவும் இருக்க முடியும்.

நாங்கள் தவறிழைக்கும் போதும் எங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத போதும் இதே வழிமுறையில் தான் எமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொள்கிறோம். எம்மை நாமே மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொள்ளும் போது ஏற்படும் உளரீதியான காயங்கள் உடல்ரீதியான காயங்களை விட நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன. எதிர்மறையான சிந்தனைகளும் குற்ற உணர்வும் எம்மைச் சூழ்ந்து கொள்ளும் போது எம்மை நாமே தொடர்ச்சியாகத் தாக்கிக் கொள்கின்றோம். இது நம்மை செயற்பாடற்றவர்களாக மாற்றி விடுகின்றது. நாங்கள் செய்யும் தவறுகளையே எம்மால் சகிக்க முடியாத போது ஏன் எமது முஸ்லிம் சகோதரரை அல்லது சகோதரியை விளங்கிக் கொள்வதில் அதிகம் உணர்ச்சி வசப்படுகின்றோம். அடுத்தவர்கள் செய்யும் அநியாயங்களை நாம் இலகுவாகக் கண்டுகொள்கிறோம். ஆனால் நாளாந்தம் நமக்கு நாமே செய்து கொள்ளும் அநியாயங்கள் எமக்கு ஏன் தென்படுவதில்லை?

சிலநேரங்களில் நாங்கள் எமது ஆளுமை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றோம் - எமது வெட்க உணர்வின் காரணமாக நாம் சிறைப்பட்டுள்ளதாக அல்லது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருப்பதாக உணர்கின்றோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நம்மை நாமே நொந்து கொள்கிறோம். ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்வதன் காரணமாக அல்லது எமது கடமைகளை நாம் ஒழுங்காக நிறைவேற்றாததன் காரணமாக நாம் கடுமையான விரக்தி நிலைக்கு ஆளாகின்றோம். எமது உள்ளத்தில் இவ்வாறு ஏற்படும் உணர்வு விரக்தியாக அல்லது தோல்விமனப்பான்மையாக இருக்கும் அல்லது அது பதற்ற நிலையாக இருக்கும். எதிர்காலம் பற்றிய பயத்தினால் அல்லது இனம்புரியாத அச்சத்தினால் பலர் பதற்றத்துக்கு உள்ளாகின்றனர். நிலைமைகள் எதுவாக இருப்பினும் பொதுவாக விளைவுகள் ஒன்றாகவே காணப்படும். எதிர்மறையான சுய-உரையாடலின் மூலம் நம்மை நாமே நம்பிக்கையிழக்கச் செய்கின்றோம். அதனால் எமக்குக் கவலை ஏற்பட்டு எதிர்பார்ப்புக்கள் அற்றவர்களாக மாறுகின்றோம். நாங்கள் தவறு செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் மென்மேலும் கடுமையாக நடந்து கொள்கின்றோம். அதனால் மென்மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றோம். அமைதி இழக்கின்றோம். இந்த முறையை நாம் நிறுத்த வேண்டும். நாம் எமது அமைதியை இழக்கச்செய்கின்ற பல்வேறு காரணிகளையும் அமைதியை மீளப் பெறுவதற்கான நுட்பங்களையும் அறிந்து கொள்வது அவசிய மாகும்.

மன அமைதியைக் கெடுக்கும் காரணிகள்

1. கடந்த காலத்தில் வாழ்தல்.

சில சந்தர்ப்பங்களில் மனிதர்கள் தாம் சொல்லால் அல்லது செயலால் செய்த தீமைகளை எண்ணி தாம் மன்னிக்க முடியாத தவறுகளை இழைத்துள்ளதாகத் தம்மைத் தாமே நொந்து கொள்கிறார்கள். அவர்கள் தாம் இழைத்த தவறுகளை எண்ணி எந்நேரத்திலும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். சிலர் அடுத்தவர்கள் தமக்குச் செய்த தவறுகளை மன்னிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும். ( 7:199)

அவர்களுக்கு அவர்களது பெற்றோர், கணவன், மனைவி, உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமே இல்லாதவர்கள் போன்ற யாராவது ஏதாவது ஒரு தீங்கினைச் செய்திருக்க முடியும். அவர்கள் அந்நிகழ்வினை மறக்க முடியாது தவித்துக் கொண்டிருப்பார்கள். இறுதியில் அவர்கள் அத்தீங்கினை இழைத்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாத அளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகி விடுகின்றனர். நீங்கள் கடந்த காலம் பற்றிய கவலைகளுடன் வாழும் போது நிகழ்காலத்தில் கிடைக்கும் அருள்களை அனுபவிக்க முடியாது. அவர்கள் கடந்த காலத்தில் வாழ்வதனால் அவர்களால் தங்களது தவறுகளை அல்லது பிறரின் தவறுகளை மன்னிக்க முடியாதிருக்கும். அதன் மூலம் அவர்கள் தங்கள் மன அமைதியைத் தாங்களே கெடுத்துக் கொள்கின்றார்கள்.

2. எதிர்காலத்தைப் பற்றிய கவலை

சிலர் எப்போதும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனா கப்) படைத்தோம். (மனப் போராட்டம் மன அழுத்தம் கொண்ட ஒரு நிலை) (90:4)

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? எனக்குப் பிள்ளை கிடைக்குமா? நான் பரீட்சையில் சித்தியடைவேனா? எனக்குத் தொழில் கிடைக்குமா? எனது பிள்ளைகள் எப்படியானவர்களாக இருப்பார்கள்? அவர்களது படிப்புக்கான செலவுகளை எப்படிச் செய்வேன்? என்னை நோய்கள் தொற்றுமா? நான் நோய்வாய்ப்படுவேனா? நான் ஓய்வுபெற்றால் என்ன நடக்கும்? இவ்வாறான கவலைகள் தொடர்ந்து கொண்டே செல்லும். எதிர்காலம் தொடர்பான இக்கவலைகளின் காரணமாக அவர்கள் நிகழ்காலத்தில் சிறப்பான நிகழ்வுகளைத் தவறவிடுகின்றனர்.

3. ஒப்புநோக்குதல்

அவர்கள் அமைதி இழப்பதற்கான மற்றொரு காரணம் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதாகும். அடுத்தவர்களின் வெளிப்படையான பகட்டினைப் பார்த்து தாம் தமது மனைவிமாரும் பிள்ளைகளும் தரத்தில் குறைந்தவர்கள் என்று கவலைப்படுகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் ஒரு தனியான பொதியாக இருக்கிறான். எனவே அனைத்துப் பொதிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்களே சிலவேளை ஒரு மனிதனின் வெளித்தோற்றத்தைப் பார்த்து பொறாமைப்பட முடியும். ஆனால் அவருடைய உள்ளம் நோய்வாய்ப்பட்டதாக இருக்க முடியும். நீங்கள் அடுத்தவர்கள் எதிர்நோக்கும் சோதனைகளை அறியாமல் இருக்கும் போது தான் அவர்களின் செல்வங்களும் உடைமைகளும் உங்களைக் கவர முடியும்.

அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் (6:165)

அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம் (15:88)

நாங்கள் எம்மை அடுத்தவர்களுடன் ஒப்பிடுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது உள்ளத்தில் கவலையும் பதற்றமுமே ஏற்படும். எமது வாழ்விலுள்ள ஆச்சரியமான விடயங்களை எங்களிடமிருந்து பறித்துவிடும். நாங்கள் சிறந்தவர்களாக மாறுவதற்கான தூண்டுதலாக அமைவதற்காக நாங்கள் எம்மை அதிகம் அறிவுபடைத் தவர்களுடனும் அதிக தர்மம் செய்பவர்களுடனும் எம்மை ஒப்புநோக்க முடியும். அல்லாஹ் ஒருவருக்கு குர்ஆனைக் கற்றுக்கொடுத்துள்ளான். அவர் இரவிலும் பகலிலும் அதனை ஓதி வருகின்றார். மற்றும் ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்துள்ளான். அதனை அவர் நற்காரியங்களுக்காகச் செலவிடுகின்றார். இந்த இரண்டு மனிதர்களைத் தவிர வேறு எவரையும் பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அதே போன்று எங்களை விட ஏழைகளாகவுள்ளவர்களுடனும் ஆரோக்கியம் குறைந்தவர்களுடனும் எம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். இவ்வாறு செய்வதன் மூலம் எங்களுக்கு கிடைத்துள்ளவற்றைக் கொண்டு திருப்தியடைய முடியும். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வு எம்மிடம் ஏற்படும்.

4. விதியை ஏற்காமை

மன அமைதியைக் கெடுக்கின்ற காரணிகளில் மிகவும் மோசமானது விதியைப் புறக்கணிப்பதாகும். தங்கள் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் காரணமாக மனம் குழம்பி, கோபமடைந்து விரக்தியடைவதனால் இது ஏற்படுகின்றது. தமக்குத் திருமணம் நடக்காமை, தாம் விவாகரத்துப் பெற நேர்ந்தமை, தொழில் கிடைக்காமை, மருத்துவ ரீதியான பிரச்சினைகள், தனது மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ முடியாமை போன்ற ஏதாவது ஒரு நிகழ்வினால் இந்நிலை ஏற்பட முடியும். இவற்றில் எதுவாக இருந்தாலும் அவர்கள் குழம்பிப்போய் இருப்பார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் உணர்வார்கள். ஏனையோர் அவற்றை சிறிய விடயங்களாகக் கருதும் போது அவர்களுடைய வாழ்வு மட்டும் ஏன் இவ்வாறு துன்பகரமானதாக உள்ளது? என்பதே இங்கு எழுகின்ற வினாவாகும். இங்கு அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான் என்பதைப் புரிந்து கொள்வது அத்தியவசியமானதாகும். யாராவது தங்கள் வாழ்வைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள் என்றால், தான் அல்லாஹ்வை விட அறிந்தவனாக இருப்பதாக (அஸ்தஃபிருல்லாஹ்) மறைமுகமாகக் கூறுவதாகவே அமையும். மனிதர்கள் தங்கள் விதியை நிராகரிப்பதன் ஊடாகத் தங்களுக்குத் தாங்களே துன்பகரமான வாழ்வை தண்டனையாக விதித்துக் கொள்கிறார்கள்.

சிலவேளை நீங்கள் உங்களுக்குச் சிறந்தவற்றை (தீயவை என்று எண்ணி) வெறுக்கக்கூடும். மேலும் நீங்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியவற்றை (அவை நல்லவை என்று எண்ணி) விரும்பக்கூடும். அல்லாவே அனைத்தையும் அறிந்தவன். நீங்கள் (எல்லாவற்றையும்)அறிந்தவர்களல்லர். ( 2:216)

மன அமைதி பெறுவதற்கான வழிறைகள்

  1. அல்லாஹ்வுடனான தொடர்பு

மனிதர்கள் தங்களைப் படைத்த அல்லாஹ்வுடன் சிறப்பான தொடர்பினை பேணி வரும் போது அவர்களுக்கு நிரந்தரமான மன அமைதி கிடைக்கும்.

அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன்தான் அமைதியை இறக்கினான். (48:4)

அவர்கள் பரந்த கண்ணோட்டத்துடன் அனைத்தையும் நோக்குவார்கள். தங்கள் வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளையும் கஷ்டங்களையும் மாத்திரம் பார்த்து எல்லாம் துன்பமாகவே உள்ளது என எண்ண மாட்டார்கள். மனிதர்கள் தம்மைப் படைத்த இறைவனுடன் ஆரோக்கியமான தொடர்பைக் கொண்டிருக்கும் போது அவர்களின் உள்ளத்தில் புதுமையான முறையில் அமைதி ஏற்படும். கற்பனை செய்து பார்க்கவும் முடியாத சோதனைகளை அவர்கள் எதிர்நோக்கினாலும் அல்லாஹ்வின் வாக்குறுதிகள் நிச்சயமாக அவர்களது உள்ளங்களில் நிறைவான அமைதியை ஏற்படுத்தும். மனிதர்கள் அல்லாஹ்வின் திருநாமங்களையும் பண்புகளையும் அறியும் போது அவற்றை வெறுமனே பெயர்களின் பட்டியலாக விளங்காது உண்மையாகவே அறிந்து கொள்வார்களாயின் அவர்கள் அமைதியைக் கெடுக்கும் காரணிகளுக்கு இரையாகமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படுபவர்களாகவோ எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொண்டவர்களாகவோ தங்களுடைய வாழ்வை அடுத்தவர்களுடன் ஒப்பிடு பவர்களாகவோ விதியை நிராகரிப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அல்லாஹ்வுடனான தொடர்பை நன்றாக நிலைநிறுத்தாதவரை உண்மையான மன அமைதியைப் பெற முடியாது.

அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். (10:62-63)

  1. உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளல்

மன அமைதியைப் பெறுவதற்கான மிக முக்கியமான ஒரு வழிறை உண்மைநிலையை ஏற்றுக்கொள்வதாகும். உங்கள் கடந்த காலம், உங்கள் எதிர்காலம் உங்கள் கண்ணோட்டங்கள், சூழ்நிலைகள் உங்கள் விதி உள்ளிட்ட வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உண்மையாகவே ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும். உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் உங்கள் இதயம் கவலைகளாலும் பதற்றத்தினாலும் நிரம்பி யிருக்கும்.

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வ முடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (27:23)

நீங்கள் ஏதேனும் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்ட உடனேயே உங்கள் உள்ளத்தில் அமைதி ஏற்பட்டு விடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளருக்கு அவர்களது வாழ்வின் உண்மை நிலையை விளக்கி ஏற்றுக் கொள்ளச் செய்வதிலேயே உள வள ஆலோசனைச் சிகிச்சை அதிக கவனம் செலுத்துகின்றது. இவ்வாறான ஆலோசனைச் சிகிச்சையைப் பெறுபவர்கள், உதைப்பதன் மூலம் கூச்சலிடுவதன் மூலம் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுவதை நிறுத்தி இறுதியாக வாழ்வில் தமது பாகத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

  1. சுய-அங்கீகாரம்

பெரும்பாலான மனிதர்கள் மிகவும் குறைந்த சுயமதிப்பையே கொண்டுள்ளார்கள். அடுத்தவர்கள் தங்களை ஏற்றுக்கொண்டு மதிக்கும் போது மாத்திரமே அவர்கள் தங்களை எண்ணி திருப்தியடைவார்கள். இது தாங்கள் தாக்கம் செலுத்த விரும்புவர்களில் தங்கியிருக்கும் நிலையாகும். வழுக்கும் சாய்வு ஒன்றில் நின்றிருப்பதைப் போன்று அபாயகரமானதாகும். சமவயதுக் குழுவினரின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக கட்டிளமைப் பருவத்தினரில் பலர் எதனையும் செய்யத் துணிகிறார்கள். தனிப்பட்டவர்கள் தங்களது கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவதற்கு செய்யும் முயற்சிக்கு இது சிறந்த உதாரணமாகும். எனினும் பாராட்டுக்களும் அங்கீகாரம் கிடைக்காத விடத்து மகிழ்ச்சியற்றுக் காணப்படுவதற்குக் மேலும் பல உள்ளார்ந்த உள ரீதியான காரணிகளும் காணப்படுகின்றன. அடுத்தவர்களின் அங்கீகாரம் கிடைக்காத வரை அவர்களால் திருப்தியடைய முடியாது. அதனால் ஒருவர் மற்றவரின் பால் தேவையுடைவராக இருக்கின்றார். அடுத்தவர்கள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்காதவரை அவர்களால் திருப்தியடையவோ அமைதி யடையவோ முடியாது. அதனால் தான் அகமதிப்பு - அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் செயல்களை எண்ணி மகிழ்ச்சியடைதல் முக்கியத்துவம் பெறுகின்றது. நாங்கள் நல்லவர்கள் என்றோ பெறுமதியானவர்கள் என்றோ திருப்தியடைவதற்கு அடுத்தவர்களில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

அவர்கள், அல்லாஹ்வின் மீது அன்பின் காரணமாக ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் அடிமைகளுக்கும் உணவளிப்பார்கள். (76.8)

  1. சுய-உரையாடல்

மனிதர்கள் தங்களுடன் உரையாடுவதற்காக ஒரு நிமிடத்துக்கு 600 சொற்களைப் பயன்படுத்துவதாக மதிப்பீடுகள் கூறுகின்றன!. அவ்வளவு என்னதான் கதைக்கிறார்கள்? சுய-உரையாடல்களில் 85% வீதமானவை எதிர்மறையானவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. மனதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வழிமுறையாக சுய-உரையாடலை நாம் பயன்படுத்துவோமாயின் அதன் மூலம் நாம் மன அமைதியைப் பெறமுடியும். ஒருவன் தனக்குத் தானே ஏசுவதை விட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களைக் கூறிக் கொள்ளும் போது அவரது நிலை உயர்ந்து விடுகின்றது. அவர் இலக்கை நோக்கிச் செல்வது இலகுவாகின்றது. தவறுகள் நிகழும் போது அன்பாகவும் புரிந்துணர்வுடனும் சுய-உரையாடல் தொடர்பில் கரிசணையுடனும் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். சுய-உரையாடல் நேர்மறையானதாக இருப்பின் அவரால் தடைகளை இலகுவாக வெற்றிகொள்ள முடியும். அது எதிர்மறையானதாக இருப்பின் அவர் உடனடியாக மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்வார். சுய-உரையாடலானது சிறந்த மனோநிலையையும் மன அமைதியையும் எந்தவொரு இலட்சியத்தையும் அடைவதற்கான ஆற்றலையும் ஏற்படுத்தும்.

  1. சுய-மதிப்பு

ஒரு மனிதனின் சுய பெறுமதியானது வெறுமனே சில இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டதன்று- அதாவது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் நுண்ணறிவையும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் பெறுமதியைத் தீர்மானிக்க முடியாது. இத்தகைய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் தனது பெறுமதியை ஒப்புநோக்க முற்படுவாராயின் அவர் அதிகம் உற்சாகமிழந்து காணப்படுவார். சுய-மதிப்பு என்பது மனிதர்கள் தங்கள் வாழ்வின் தேவைகளை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்கான ஆற்றலும் தகைமையும் தங்களுக்கு இருப்பதாக எண்ணித் திருப்தியடைவதற்கான ஆற்றலைக் குறிக்கின்றது. தாங்கள் பெறுமதியானவர்கள் என்று உணர்வதற்கான சிறந்த வழிறை எமது வாழ்வின் ஒவ்வொரு செயற்பாட்டின் மூலம் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த முயற்சி செய்வதாகும்.

நிச்சயமாக, எனது தொழுகை, எனது வணக்கங்கள், எனது வாழ்வு எனது மரணம் ஆகிய அனைத்தும் மனி தர்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே சொந்தம். (6:162)

இவ்வாறு அடுத்தவர்களின் அங்கீககாரத்திற்காக அல்லது வேறு யாரினதும் அனுமதிக்காகக் காத்திருக்காமல் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் நாம் எமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு தனிநபரையும் எந்தவொரு சூழலிலும் உண்மையாகவே பெறுமதிமிக்கவராகக் கருதும் சிறந்ததொரு முன்னுதாரணத்தை உருவாக்குவது அவசியமாகும். சுய-மதிப்பை வளர்த்துகொள்வதற்கு நாங்கள் சிறிய, இலகுவாக அடையத்தக்க இலக்குகளை நிர்ணயித்துச் செயற்பட வேண்டும். அப்போது அது எமது உள்ளத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்கான நேரத்தையும், பணத்தையும் திறமைகளையும் செலவிடுவது உறுதியான சுய-மதிப்பை ஏற்படுத்துவதற்கு உதவும்.

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (4:85)

  1. மன்னிக்கும் மனப்பான்மை

மன்னிக்கும் மனப்பான்மை நாம் எமக்கு உள்ளேயும் பிறருடனும் சமாதானமாக வாழ்வதற்கான திறவு கோளாகும். மாசற்ற இரும்பு, மோசமான வானிலையினால் படிப்படியாகத் துருப்பிடிப்பதைப் போன்று விரக்தியும் கவலையும் எமது மன அமைதியைப் படிப்படியாகக் குறைத்துவிடும். நாம் எமது வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் சோதனைகளாகக் கருதி அவற்றில் வெற்றியடைவதில் கவனம் செலுத்துவோமாயின் மன்னிப்பது மிகவும் இலகுவான ஒரு விடயமாக மாறிவிடும். நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து சோதனைகளில் வெற்றி பெறுவதற்காக மன்னிக்கும் மனப்பான்மையைக் கடைப்பிடிப்போமாயின் எமது இதயங்களில் அமைதி குடிகொள்ளும்; நாம் உணர்வுரீதியான சுமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு தீங்கு செய்தவர்களை மன்னித்து மறந்துவிடும் போது எமது உள்ளம் ஆன்மாவும் கவலைகளிலிருந்து விடுதலை பெறும்.

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (42:40)

நீங்கள் கஷ்டங்களையும் தோல்விகளையும் சந்திக்கும்; போது மன அமைதியைக் கெடுக்கும் விடயங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அமைதியைத் திருடும் இத்தகைய விடயங்களைவிட்டுத் தூரமாகி மேலே கூறப்பட்ட ஆலோசனைகளின் ஊடாக மன அமைதியைப் பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இக்கட்டுரையில் உள்ள ஒவ்வொரு அம்சமும் இத்தலைப்பை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு மற்றொரு அம்சத்தை வேண்டி நிற்கின்றன. எவ்வாறாயினும் அதிகமான மக்கள் மனஅமைதியிழந்து மனப்போராட்டத்துடன் வாழ்வதனால் மன அமைதியை எவ்வாறு பெற முடியும் என்பதை விளக்குவதற்காகவே இவற்றை இங்கே முன்வைத்தேன். மன அமைதியைப் பெறுவதற்கான ஒரு சில வழிமுறைகளே இங்கு விளக்கப்பட்டுள்ளன. இன்னும் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. நீங்கள் மன அமைதியைப் பெறுவதற்காக முயற்சிக்கும் வழிறைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)