இலங்கை முஸ்லிம்களின் கல்வி தொடர்பான ஒரு நாள் மாநாடு

இலங்கை முஸ்லிம்களின் கல்வி என்ற தொனிப் பொருளிலே ஒரு நாள் கல்வி மாநாடு ஜூலை 14ஆம் திகதி கொழும்பு பூக்கர் மண்டபத்தில் நடைபெற்றது. இதனை வாமி நிறுவனத்தின் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை மற்றும் அதன் கடந்த கால, எதிர்கால சவால்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. புத்திஜீவிகள், கல்வியாளர்கள், சமூக சேவை மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 110 பேர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

வாமி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷைய்க் எச்.எல்.எம். ஹாரிஸின் வரவேற் புரையுடன் மாநாடு ஆரம்பமாகியது. ஜாமியா நளீமிய்யா பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியினால் முஸ்லிம் கல்வி கடந்த கால பிரதிபலிப்புக்கள்என்ற தலைப்பில் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது. முஸ்லிம்கள் இன்று பல்வேறு பட்ட கல்விப் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். இப்பிரச்சினைகளை இனங்காண்பதற்கும் சரியான முறையில் தீர்ப்பதற்கும் வரலாற்றுப் பின்னனி தேவைப்படுகின்றது என தனது உரையை ஆரம்பித்து இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாறு பற்றி கலாநிதி சுக்ரி விரிவாக தெளிபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஜாமியா நளீமிய்யா பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷைய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் சமூக மேம்பாட்டுக்கு கல்வியின் முக்கியத்துவம்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அறிவாளி யாரென்றால் நன்மை எது, தீமை எது எனப் பிரித்தறிபவர் அல்ல. மாற்றமாக நன்மைகளுள் நன்மை எது? தீமைகளுள் மிகத் தீமையானது எது என்பதை பிரித்தறிபவர்தான் உண்மையான அறிவாளி என்ற இமாம் இப்னு தைமியாவின் மேற்கோளை சுட்டிக்காட்டியவராக கல்விக்கு கூடிய முன்னுரிமை (top priority) வழங்கப்பட வேண்டும் என்பதை வழியுறுத்தி விளக்கிச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து அபிவிருத்திக் கற்கைகள் மையத்தின் பணிப்பாளர் அஷ்ஷைய்க் ரவூப் ஸைன் கலாசார அடையாளமும் மொழி மற்றும் இலங்கை முஸ்லிம்களின் கல்வியும்என்ற தலைப்பில் தனது ஆய்வை முன்வைத்தார்.

இதன் பின்கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனை கலாநிதி அஷ்ஷைய்க் எச்.எல்.எம். ஹாரிஸ், கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, அஷ்ஷைய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் மற்றும் அஷ்ஷைய்க் ரவூப் ஸைன் ஆகியோர் நடாத்தினர். கலந்துரையாடலின் இறுதியில் இலங்கை முஸ்லிம்களின் கல்வியின் அடுத்த கட்ட நகர்வை விரிவாக ஆராய்ந்து நடைமுறை சாத்தியமான முன்மொழிவை தயாரித்து முன்வைப்பதற்காக கலாநிதி அஷ்ஷைய்க் எச்.எல்.எம். ஹாரிஸின் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவொன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

இறுதி அம்சமாக நன்றியுரை இடம்பெற்றது. இதனை வாமி நிறுவனத்தின் சிறுவர்கள் பராமரிப்புப் பிரிவின் பொறுப்பாளர் அஷ்ஷைய்க் ஏ.ஆர்.ஏ. ஹபீழ் நிகழ்த்தினார்.

இம்மாநாட்டடில் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் மற்றும் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் ஆகியோரது முஸ்லிம் கல்வி- சவால்களும் சமகாலப் பிரச்சினைகளும் மற்றும் முஸ்லிம் கல்வி ஆலோசனைகளும் பரிந்துரைகளும் என்ற தலைப்பில் உரைகள் இடம்பெற இருந்தன. என்றாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர்களுக்கு சமூகம் தர முடியாததையிட்டு அவ்வுரைகள் இடம்பெற வில்லை.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)